உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்தின் இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று(பிப் 13) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரப்பட்டுள்ளன. இனி, உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்துடன் இயங்கும். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த இரண்டு நீதிபதிகளையும் சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இந்த பதவி உயர்வுக்கு முன், நீதிபதி பிண்டல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி குமார் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தனர்.
மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் ஏற்பட்ட மோதல்கள்
இவர்களின் பெயர்களை பதவி உயர்வுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பரிந்துரைத்தது. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பிப்ரவரி 6அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, உச்ச நீதிமன்ற பதவி உயர்வுக்கு இந்த ஐந்து நீதிபதிகளையும் பரிந்துரைத்தது. இதனால், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் சில மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த 7 நீதிபதிகளும் பதவியேற்றுள்ளனர்.