Page Loader
தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது 
தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது

தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது 

எழுதியவர் Nivetha P
Jun 12, 2023
02:25 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கீர்த்தி திருவண்ணாமலை கலசப்பாக்கம் படவேடு-ரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மளிகைக்கடை ஒன்றினை நடத்திவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிரபாகரன் அண்மையில் ஒரு வீடியோ பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், தனது மனைவி நடத்திவரும் கடையில் சில மர்மநபர்கள் நுழைந்து நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கண்ணீர்விட்டு கதறியுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தாரை காப்பாற்றும்படியும், தனது மனைவி இதுகுறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானநிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

நடவடிக்கை 

தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் கைது 

இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை சந்தவாசல் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதன்படி,சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கீர்த்தி அளித்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் என்னும் ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் என்னும் 2 நபரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட கீர்த்தி தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் தங்கள் விசாரணையினை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் வீடியோ வெளியிட்டுள்ள பிரபாகரன், "ராணுவ அதிகாரியான நான் தலை வணங்க கூடாது. எனினும், எனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக மண்டியிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு அவமானமாக உள்ளது" என்று கண்கலங்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.