
TVK கரூர் பொதுக்கூட்டம்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு
செய்தி முன்னோட்டம்
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது
கைது மற்றும் முன்ஜாமீன் விவரங்கள்
வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள மதியழகன் நேற்று (செப்.29) கைது செய்யப்பட்டார். மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கருதப்படும் கரூர் தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் இன்று (செப்.30) காலை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போலீசார் தீவிரமாகத் தேடி வருவதை அறிந்த ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்ஜாமீன் மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அன்று விசாரணைக்கு வரவுள்ளன.