Loading...
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் பட்ஜெட் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகள் அடங்கிய ஆவணத்திற்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

விவாதம்

தேர்தல் வாக்குறுதிகள் மீதான விவாதம்

சட்டமன்ற தேர்தலின் போது தவெக அளித்த முக்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாகச் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கான நலத்திட்டங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை விரிவாக்குதல் மற்றும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான முன்மொழிவுகளுக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT