கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அமெரிக்கர்; பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லை பகுதியான சோனாலி அருகே, முறையான பயண ஆவணங்கள் இன்றி நேபாளத்திற்குள் நுழைய முயன்ற 36 வயது அமெரிக்கக் குடிமகன் ஒருவரை SSB பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். எல்லைத் தூண் எண் 516 அருகே உள்ள மைனிஹ்வா பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போது இந்த அமெரிக்கர் பிடிபட்டார். இது குறித்து மகாராஜ்கஞ்ச் கூடுதல் எஸ்பி சித்தார்த் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் முன்னாள் அமெரிக்க சிறப்பு சேவை அதிகாரி என்று கூறிக்கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விபரங்கள்
தாய்லாந்து முதல் கோவா வரை: கடல்வழிப் பயணம்
விசாரணையில் அவர் கூறிய விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முதலில் சுற்றுலா விசா மூலம் தாய்லாந்து சென்ற ஜோர்டான் பிரவுன், அங்குத் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
அதன்பின், முறையான ஆவணங்கள் ஏதுமின்றி கடல் வழியாக முதலில் இலங்கைக்கும், பின்னர் 2025 நவம்பர் மாதத்தில் கடல் வழியாகவே இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் கோவாவில் ரகசியமாக வசித்து வந்த அவர், தற்போது சட்டவிரோதமாக நேபாளத்திற்கு தப்பிச்செல்ல முயன்றபோது எல்லையில் சிக்கியுள்ளார்.
அவரது பின்னணி குறித்துப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாததால், வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
என்.ஐ.ஏ
NIA வலையில் சிக்கிய அமெரிக்க, உக்ரைன் நாட்டவர்கள்
இந்த கைது சம்பவம் ஒருபுறமிருக்க, அண்மையில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA) மியான்மர் எல்லையையொட்டிய பகுதிகளில் பயங்கரவாத பயிற்சி அளித்ததாக 5 உக்ரைன் நாட்டவர்கள் மற்றும் ஒரு அமெரிக்க குடிமகனை கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த இவர்கள், மிசோரம் வழியாக மியான்மருக்குள் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.
அங்கு அந்நாட்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்படும் ஆயுத குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு ட்ரோன் போர்முறை மற்றும் நவீன ராணுவத் தொழில்நுட்பங்கள் குறித்த போர் பயிற்சிகளை வழங்கியதாக NIA குற்றம் சாட்டியுள்ளது.