தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி: சாதனைகள், நிர்வாகச் சவால்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, ஆகஸ்ட் 17-ஆம் தேதியான இன்று தனது முதல் 100 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளது. 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான நிர்வாகச் சவால்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.
முக்கிய திட்டங்கள்
100 நாள் ஆட்சியில் தவெக அரசு நிறைவேற்றிய முக்கிய திட்டங்கள்
தனது 100 நாள் ஆட்சியை ஒட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள தகவலில், "100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் மற்றும் விவசாயிகள் நலன்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் (ரூ.560 கோடி), அண்ணனின் சீர் திட்டம் (ரூ.812 கோடி), மற்றும் 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: வெற்றித் திறன் பயிற்சித் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு: 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுடன், 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' மூலம் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சிக்கல்கள்
உருவான நிதி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள்
அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த போதிலும், நடைமுறைச் சிக்கல்கள் சில பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டாலும், மீட்டர்களைக் கணக்கிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஜூலை மாத மின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் காலாண்டிற்கு சுமார் ரூ.1,680 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை மாநகராட்சியில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டதாக எழுந்த எதிர்ப்பை அடுத்து, அவ்வுயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் நிலவுவதால், சில முக்கியத் தொழில் திட்டங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசியல் சர்ச்சைகள்
சட்டம் - ஒழுங்கு மற்றும் அரசியல் சர்ச்சைகள்
புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் அரசியல் ரீதியான விவகாரங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அரங்கேறிய தொடர் கொலைச் சம்பவங்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான மோதல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கவலை தெரிவித்துள்ளன.
6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்தது மற்றும் 7 தொகுதிகள் காலியாக இருப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய அரசுப் பொறுப்புகளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
விமர்சனங்கள்
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன
தவெக அரசின் 100 நாள் சாதனைப் பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், தவெக அரசின் 100 நாள் சாதனை என்பது ஊடக விளம்பரத்திற்கான வெறும் மேலோட்டமான விஷயம் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் சாடியுள்ளனர்.
சட்டசபையில் திமுக மற்றும் அதிமுகவின் அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் புதிய அமைச்சர்களின் அனுபவமின்மை, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மின்சார விநியோகச் சீரமைப்பு ஆகியவை தவெக அரசுக்கு முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன.