Loading...
தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழா: 5 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் இன்று பரிசு
மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது

தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழா: 5 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் இன்று பரிசு

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
03:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023 முதல் ஆண்டுதோறும் மாணவர்களை நேரில் அழைத்து ஊக்கப்படுத்தி வரும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்றைய விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் உயர்கல்விக்கான ஊக்கத்தொகைகளை வழங்குகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த பாராட்டு விழா மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

5 மாவட்ட மாணவர்கள்

முதற்கட்டமாக 5 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.

சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பல கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த விழாவில், சாதனை படைத்த மாணவர்களுடன் சேர்த்து அவர்களது பெற்றோர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் முன்னிலையில் மாணவர்களின் உழைப்பைப் பாராட்டி முதலமைச்சர் விஜய் பரிசுத்தொகையும் வழங்க உள்ளதால் அரங்கம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாஸ் விநியோகம் 

பாஸ் விநியோகம் மற்றும் விழா எதிர்பார்ப்பு

விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பிரத்யேக நுழைவு பாஸ்களை வழங்கும் பணி முன்னதாகவே முடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மூலமாக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இதற்கான டோக்கன்கள் முறையாக வழங்கப்பட்டன. மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் டோக்கன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்விச் சாதனைகளை அங்கீகரித்து அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் விஜய் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT