LOADING...
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி? புயலைக் கிளப்பிய விஜய பிரபாகரன் பேட்டி
விஜய பிரபாகரன் பேட்டியால் தவெக தேமுதிக கூட்டணி உருவாகலாம் என ஊகம்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி? புயலைக் கிளப்பிய விஜய பிரபாகரன் பேட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2025
05:40 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து, தேமுதிகவின் முக்கியத் தலைவரான விஜய பிரபாகரன் மறைமுகமாக குறிப்பிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலுக்கு தேமுதிக தனது கூட்டணியை ஜனவரி 9 அன்று நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். விஜய் பிரபாகரன், "எங்கள் உண்மையான கூட்டணி மக்களுடன் தான். கேப்டன் விஜயகாந்திற்கும் விஜய்க்கும் நெருங்கிய நட்பு இருந்தது. விஜய் அண்ணனை எங்களுக்குப் பிடிக்கும். அரசியல் ரீதியாக இணைவது குறித்த அறிவிப்பை ஜனவரி 9 அன்று வெளியிடுவோம்." என்று தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக மற்றும் தவெக இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

தேர்தல்

தேர்தல் வியூகம்

விஜய் பிரபாகரன் மேலும், விஜயகாந்துக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே நீண்டகாலமாக நட்பு இருந்து வருகிறது. இந்த நட்பை அரசியல் மேடையில் வெளிப்படுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டது, இந்த கூட்டணி வெறும் அரசியல் ரீதியானதல்ல, உணர்வுபூர்வமான இணைப்பாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, அதிமுக மற்றும் திமுக போன்ற பெரிய கட்சிகளின் தேர்தல் வியூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள செல்வாக்கும், விஜயகாந்தின் ரசிகர்கள் மூலம் தேமுதிகவுக்கு உள்ள வாக்கு வங்கியும் இணைந்தால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால், இந்த பேட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.