நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு
திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏஆர் பால் பண்ணையை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், கலப்பட நெய்யை விநியோகித்ததாகக் கூறி, அதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாக அதிகாரி ஜே.சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்குப் பிறகு, அதன் முதல் அதிகாரப்பூர்வ பதிலில், அதை சரிசெய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, லட்டு தயாரிக்க மீண்டும் கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்பான நந்தினி நெய்யை மீண்டும் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
நெய்யை பரிசோதிக்க ஆய்வகம் அமைக்கும் திருப்பதி தேவஸ்தானம்
நெய்யில் கலப்படம் குறித்த ஆய்வக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதில் இருந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து மீண்டும் நெய் கொள்முதலுக்கு புதிய டெண்டரை விட திட்டமிட்டுள்ள தேவஸ்தானம், ரூ.75 லட்சம் மதிப்பில் திருப்பதில் நெய்யின் தரத்தை ஆய்வு செய்ய நவீன உபகாரணங்களைக் கொண்டு ஆய்வகம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது, குவஹாத்தியில் உள்ள தேயிலை-சோதனை ஆய்வகங்களுக்கு நிகராக இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நெய்யின் தரத்தை சோதிக்க பிரத்யேக ஆய்வகம் குஜராத்தின் ஆனந்த் நகரில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள அமுல் நிறுவனம் வெளிநாடுகளுக்கு அதிகளவில் நெய்யை ஏற்றுமதி செய்வதால், இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது.