திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட்
மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், சபை தலைவருடன் நேருக்கு நேர் மோதியதால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நேற்று பலத்த பாதுகாப்பு மத்தியில், மக்களவைக்குள் திடீரென்று நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், இன்று ராஜ்யசபா கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரினர். பாதுகாப்பு மீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், அதற்காக இன்றைய நாடாளுமன்ற விவாதங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 28 நோட்டீஸ்களை தாக்கல் செய்தனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
ஆனால், தலைவர் ஜகதீப் தன்கர் நோட்டீஸ்களை ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. எம்.பி.க்களின் இந்த "கட்டுப்பாடற்ற நடத்தை" விதிகளை மீறிய செயல் என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் அவையின் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் இடத்திற்கு கீழ் இறங்கி போராட்டத்தை தொடங்கினார். இதனால் கோபமடைந்த தன்கர், ஓ'பிரையன் அவையை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து, ஓ'பிரைனை குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ராஜ்யசபா ஏற்றுக்கொண்டது.