திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வைணவர்களின் கோயில் என்றும் அழைக்கப்படும்.
மிக சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் சித்திரை தேரோட்ட திருவிழா மிக விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இக்கோயிலில் தேரோட்ட திருவிழாக்கள் வருடத்திற்கு 3 முறை நடைபெறும்.
அந்த மூன்றில் ஒன்று தான் விருப்பன் திருநாள் என கூறப்படும் சித்திரை தேரோட்டம்.
இந்த சித்திரை திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 21ம் தேதி வரை, 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(ஏப்ரல்.,19) துவங்கி மிக விமர்சையாக நடந்து வருகிறது.
திருவிழா
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அதன்படி, ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடந்து வரும் இந்த தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்று பக்தி முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
இன்று காலை 6 மணியளவில் தேரோட்டம் துவங்கிய நிலையில், நேற்று மாலை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து நம்பெருமாள் அணிந்து கொள்வதற்காக பட்டு வஸ்திரம், கிளிமாலை மற்றும் சீர்வரிசை மங்கல பொருட்கள் வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து 4 சித்திரை வீதிகளில் தேர் வலம் வரும் என்பதால் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.