திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி : திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில்லுள்ள லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அந்நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவரில் பெரியளவில் ஓட்டை ஒன்று போடப்பட்டு அதன்வழியே கொள்ளையடிக்க வந்த மர்மஆசாமிகள் கடைக்குள் நுழைந்துள்ளனர். இந்த கடைக்கு 6 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உள்ளே நுழைந்த கொள்ளைக்காரர்கள் மிக நிதானமாக கடையில் இருந்த ரூ.50 கோடி நகைகளை கொள்ளையடித்து வெறும்காலி அட்டைப்பெட்டிகளை விட்டுச்சென்ற பரிதாபம் நிகழ்ந்தது. வெகுநாட்களாக திட்டமிட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அமல்ராஜ் உடனே நேரடியாக வந்து ஆய்வினை மேற்கொண்டார்.
குழந்தைகள் அணியும் பொம்மை மாஸ்கினை அணிந்த கொள்ளையர்கள்
இதனிடையே, கடையினை கொள்ளையடிக்க வந்த 2 நபர்கள் தங்கள் முகம் கேமராக்களில் பதிவாகாமல் இருக்க குழந்தைகள் அணியும் பொம்மை மாஸ்கினை அணிந்துள்ளனர். கிட்டத்தட்ட 1 1/2மணிநேரம் இந்த கொள்ளையர்கள் கடைக்குள் இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது கேமராப்பதிவுகள் மூலம் தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை கண்டறிய மோப்பநாய்களை போலீசார் பயன்படுத்தியநிலையில் மிளகாய் பொடியினை தூவிச்சென்றதன் காரணமாக மோப்பநாய்களால் கண்டறிய முடியவில்லை. இதனைத்தொடர்ந்து, கொள்ளையர்களை கைது செய்ய 7தனிப்படைகளை அமைத்த போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இத்தகைய துணிகரச்சம்பவம் அப்பகுதி சாதாரண மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. முன்னதாக சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை போலவே இதுவும் நடந்திருந்தநிலையில், காவல்துறை தனது கவனத்தினை வடமாநிலத்தவர்கள் மீது திருப்பினர்.