நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை!
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகள், குணா குகை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களும் நாளை மூடப்படும். கோவையின் கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல நாளை நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் முக்கிய சுற்றுலாத் தலங்களும் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்களைத் தடுக்க வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் யானைப் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
விடுமுறை அறிவிப்பு
ஊதியத்துடன் கூடிய விடுமுறை
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135B-ன் படி, அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிகள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 75,032 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று மறக்காமல் வாக்களியுங்கள். உங்கள் வாக்கு, உங்கள் வலிமை!