
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்
செய்தி முன்னோட்டம்
மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள்-சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்.
சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் மே 31அன்று தங்கள் வேலையை மீண்டும் தொடங்கினர்.
கடந்த ஏப்ரல் முதல், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்கள் பிரிஜ் பூஷனை கைது செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
details
இது நீதிக்கான எங்கள் போராட்டம், நாங்கள் பின்வாங்க மாட்டோம்: சக்ஷி மாலிக்
இந்நிலையில், அவர்களது ஜந்தர் மந்தர் போராட்டம் கடந்த வாரம் டெல்லி போலீஸாரால் கலைக்கப்பட்டது.
இருந்தும் அவர்கள் ஓயவில்லை. விவசாய குழுக்களின் உதவியோடு அவர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அவர்கள் போராட்டத்தில் இருந்து விலகி தங்கள் ரயில்வே பணியில் மீண்டும் சேர்ந்ததாக இன்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சக்ஷி மாலிக், "இது நீதிக்கான எங்கள் போராட்டம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். நாங்கள் ரயில்வேயில் எங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளோம். ஆனால் அடுத்த என்ன செய்யலாம் என்பதையும் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.