கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 40,000 பெட்டி தக்காளியை விற்று 45 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். சித்தூரை சேர்ந்த தக்காளி விவசாயி சந்திரமௌலி, தனது 22 ஏக்கர் விவசாய நிலத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் அரிய வகை தக்காளி செடியை விதைத்தார். ஜூன் மாத இறுதிக்குள் தக்காளியை விளைய வைக்க வேண்டும் என்பதற்காக அவர், தழைக்கூளம் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற மேம்பட்ட நுட்பங்களை செயல்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார். அதன் பிறகு, அவர் தனது விளைபொருட்களை கர்நாடகாவில் உள்ள கோலார் சந்தையில் விற்று பணமாக்கினார்.
1 கோடி முதலீடு செய்து 3 கோடி ரூபாய் லாபம் பார்த்த விவசாயி
கடந்த 45 நாட்களில் அவரது 40,000 தக்காளி பெட்டிகள் விற்பனையானது. அப்போது, 15 கிலோ தக்காளியின் விலை ரூ.1,000-ரூ.1,500ஆக இருந்தது. தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சந்திரமௌலி, "இதுவரை கிடைத்த விளைச்சலில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளேன். ஒட்டுமொத்தமாக எனது 22 ஏக்கர் நிலத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்து விளைச்சலை பெற வேண்டியிருந்தது. கமிஷன் மற்றும் போக்குவரத்து கட்டணங்களும் இதில் அடங்கும். அதனால், லாபம் ரூ. 3 கோடியாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தைகளில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை-28), இந்த சந்தையில் முதல்தர தக்காளியின் விலை அதிர்ச்சியூட்டும் வகையில் ரூ.200ஆக இருந்தது.