தொடங்கியது வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் சேதமடைந்தது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில், இந்த 4 மாவட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணை நேற்று(டிச.,13) வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று(டிச.,14) பிற்பகல் முதல் விநியோகம் செய்யப்படுவதோடு, இந்த டோக்கன் வழங்கும் பணியில் கூட்டுறவு துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
17ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கவுள்ளார்
அவ்வாறு வழங்கப்படும் டோக்கன்களில் நிவாரணத்தொகை வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள், டோக்கன் எண், அலுவலரின் கையொப்பம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், நிவாரணம் வழங்குவது குறித்த பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று தெரிகிறது. இதனையடுத்து, வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் இந்த வெள்ள நிவாரண தொகை வழங்குவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயலால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு 2 நாட்கள் வெள்ளத்தில் சிக்கி பொருட்களை இழந்தவர்களுக்கான இழப்பீடாக அரசு இந்த நிவாரண தொகையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.