தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, அமைக்கப்பட்டது தான் காவிரி மேலாண்மை வாரியம்.
இவ்வாரியத்தின் உத்தரவுப்படி கடந்த 4 மாதங்களாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,29)காவிரி மேலாண்மை ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் கலந்துக்கொண்டனர்.
அப்போது தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர் என்று கூறப்படுகிறது.
அதன்படி, அவர்கள் ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படவேண்டிய 45.95 டிஎம்சி.,நீரில் பெருமளவு திறக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் வரும் செப்டம்பர் மாதம் கொடுக்கவேண்டிய 36 டிஎம்சி நீரினை அம்மாநிலம் முழுமையாக வழங்கினால் மட்டுமே குறுவை சாகுபடியினை மேற்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது.
காவிரி நீர்
அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு
இதனை தொடர்ந்து கர்நாடகா அரசு சார்பில் கூறுகையில், 47 அளவுக்கு நீர் பற்றாக்குறை உள்ளது. 4 அணைகளில் போதியளவு நீர் இல்லை, இனி வரக்கூடிய நாட்களில் மழைபொழிவிற்கான சூழலும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அணைகளில் உள்ள நீர் தங்கள் குடிநீர் தேவைக்கு மட்டுமே உள்ளது என்றும் கரநாடகா அரசு தரப்பு கூறியுள்ளது.
இந்த கருத்துக்கள் அனைத்தையும் மனதில் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம், அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீரினை திறந்து விடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ஆனால் இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.