
13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் குரூப் 4; தேர்வர்கள் தெரிந்துகொண்ட வேண்டியவை என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சனிக்கிழமை (ஜூலை 12) நடத்த உள்ள குரூப் 4 எழுத்துத் தேர்வில் 13.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வு கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் உட்பட 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேர்வில் நியாயமான நடத்தையை உறுதி செய்வதற்காக டிஎன்பிஎஸ்சி கடுமையான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுதாரர்கள் காலை 9 மணிக்குள் தங்கள் தேர்வு மையங்களை அடைய வேண்டும். தாமதமாக வருபவர்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட் கட்டாயமாகும்.
அடையாள ஆவணம்
உடன் எடுத்துச் செல்ல வேண்டிய அடையாள ஆவணங்கள்
தேர்வர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம் தெளிவாகவோ அல்லது பொருந்தாமலோ இருந்தால், தேர்வர்கள் தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை, முறையாக கையொப்பமிடப்பட்ட, அடையாளச் சான்றுடன் தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு அறைக்குள் மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதை டிஎன்பிஎஸ்சி தடை செய்துள்ளது. மீறினால் விடைத்தாள்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை செய்யப்படும். ஆள்மாறாட்டம் அல்லது முறைகேடு குற்றவியல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
சரிபார்ப்பு
கேள்வித்தாள் சரிபார்ப்பு
தேர்வு தொடங்குவதற்கு முன் ஓஎம்ஆர் தாளை நிரப்பவுதோடு, வினாத்தாள்களில் அச்சுப் பிழைகள் ஏதேனும் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். ஓஎம்ஆரில் தேர்வர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அவர்களுக்கு வினாத்தாள் கிடைக்கும், ஆனால் தேர்வு முடிவதற்கு முன்பே அறையை விட்டு வெளியேற முடியாது. அனைத்து தேர்வர்களும் சுமூகமான மற்றும் வெளிப்படையான தேர்வு செயல்முறைக்கான விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு ஆணையம் கேட்டுக்கொள்கிறது.