LOADING...
ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு ரத்து

ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 08, 2026
03:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில முக்கியத் தேர்வு மையங்களில் ஏற்பட்ட கடும் குளறுபடிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த அதிரடி முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எடுத்துள்ளது. காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இந்த அறிவிப்பால் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

குளறுபடிகள்

தேர்வு மையங்களில் நடந்த குளறுபடிகள்

சென்னையில் உள்ள முக்கியக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் இன்று காலை முதலே குழப்பம் நீடித்தது. அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் 600 தேர்வர்களுக்கு அந்த மையமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு வெறும் 200 பேருக்கு மட்டுமே இருக்கைகள் தயார் நிலையில் இருந்தன. மீதமுள்ள 400 பேருக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் காலை 9 மணி கடந்தும் வினாத்தாள்கள் வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரும்பாக்கத்தில் இடம் கிடைக்காத தேர்வர்களை நந்தனம் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளக்கம்

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ விளக்கம்

தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள 3 மையங்களில் தேர்வை நடத்த இயலவில்லை என்றும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த முற்பகல் மற்றும் பிற்பகல் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இன்று ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மறுதேர்வு

மறுதேர்வு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:- மறுதேர்வு நடைபெறும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக தேர்வர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். புதிய ஹால் டிக்கெட்டுகள் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 பொது அறிவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கான திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement