LOADING...
அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு?
அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்

அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு?

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2026
04:32 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுமா என்பது வரும் நாட்களில் தான் உறுதியாகும். வழக்கமாக மே மாதத்தில் அரபிக்கடலில் உருவாகும் இத்தகைய அமைப்புகள் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழையைக் கொடுக்கும் என்பதால், வரும் நாட்களில் மழையின் தாக்கம் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடா முதல் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2 ஆம் தேதி மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை

வெப்பநிலை உயர்வு மற்றும் அசௌகரிய நிலை

மழை ஒருபுறம் இருந்தாலும், மே 4 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் ஒன்றாக நிலவுவதால், தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுமக்களுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Advertisement