பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?
வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் மீதான நடவடிக்கையை எடுக்க, அனைத்து மண்டல அலுவலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில காலமாக கார் மற்றும் ஆட்டோ பயன்பாட்டுடன், பைக் டாக்ஸி சேவையின் பயணம் முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோர், அதே நேரத்தில் விரைந்து இடம் அடைய விரும்புவோரின் முதல் விருப்பமாக இந்த பைக் டாக்சிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஓலா மற்றும் ராபிடோவில் பைக் டாக்ஸி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இது உதவியாக இருப்பதாக மக்கள் கருதுவதால், பைக் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு
ஏற்கனவே வணிக பயன்பாட்டிற்கு பைக் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அதையும் மீறி பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருவதால், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் மனு அளித்துள்ளது. அந்த மனுவை பரிசீலித்த போக்குவரத்து துறை ஆணையர் இந்த தடை உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கையை அமல்படுத்த, கள அலுவலர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மண்டலம் வாரியாக தினசரி அறிக்கை மாலை 7 மணிக்கு அனுப்ப வேண்டும் எனவும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சரின் விளக்கம் என்ன?
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். "ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது, அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது" என தெரிவித்துள்ளார்.