Page Loader
தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை
தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை

எழுதியவர் Nivetha P
Feb 09, 2023
01:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகர பேருந்துகளில் படியில் நின்றவாறு ஆபத்தான நிலையில் பயணிப்பது என்பது பல காலமாக தொடர்ந்து வருகிறது. பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அரசும் இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்ற அறிவிப்பினை தெரிவிக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அதன் படி, மாநகர போக்குவரத்து கழகம் அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம்

அறிவுரையை மீறும் மாணவர்கள் மீது காவல் துறையில் புகார்

அந்த சுற்றறிக்கையில், பேருந்து படிகளில் மாணவர்கள் பயணம் செய்தால் பேருந்தினை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவுரை அளித்தும் மாணவர்கள் கேட்கவில்லையெனில், அந்த மாணவர்கள் மீது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் காவல் துறையில் அல்லது மாநகர போக்குவரத்து கழகத்திடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பேருந்தில் ஏறும் போதும், பயணத்தின் போதும் பாதுகாப்பான விதிகளை கடைபிடிக்க செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.