டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது 'டெட்' என்று கூறப்படும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் பெற மற்றொரு போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியானது. இந்த அரசாணையினை தற்போதைய ஆளும் கட்சி திமுக ரத்து செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதனை ரத்து செய்யாமல் தமிழகத்திலுள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நடத்தப்படுவதாக அண்மையில் அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி வரும் ஜனவரி 7ம் தேதி இந்த போட்டி தேர்வு நடக்கவுள்ளது என்றும், அதற்கான முன்பதிவு நாளை(நவம்பர்.,1) ஆன்லைனில் துவங்கவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெட் பட்டதாரி ஆசிரியர்கள், இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று(அக்.,31) இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெட் ஆசிரியர்கள் சங்கத்தினரின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அப்போது அவர், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பணி நியமனத்திற்கான தேர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அதனை ஏற்கவில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனிடையே, இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக டெட் ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.