பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை இந்தாண்டே அதிகரிக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, தமிழக மக்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுக்க ஏதுவான திட்டங்கள் ஒவ்வொன்றாக கொண்டு வரப்படும்.
மேலும் பால் உற்பத்தியினை பெருக்குவது குறித்தும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கைகள் முதல் அமைச்சர் பரிசீலனையில் உள்ளது.
தற்போது நாள்தோறும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 லட்சம் லிட்டர் பாலாக அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பால்
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் ஓடவில்லை.
இதன் மூலதனமாக செய்யப்படும் செலவுகளை அதிகரித்து மற்ற செலவுகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
முன்னதாக இவர் ஆவின் நிறுவனம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், எவ்விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்கள் நலனில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
அதற்கான பொறுப்பினை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதே போல் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து அவர்கள் கோரிக்கை உரிய நேரத்தில் நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி விட்டது என்று தெரிவித்திருந்தார்.