இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
தமிழகத்தில் இன்று(மார்ச்.,31) ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞரான சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தஞ்சையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, பொம்மை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற 45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. என்று பேசினார்.
புவிசார் குறியீடு பெருவதற்கான விண்ணப்பம் நவம்பர் மாதம் செய்யப்பட்டது
இதனைதொடர்ந்து, மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன், கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன்சேலை, மயிலாடி கல்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார்குறியீடு பெற முன்னரே விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் இந்தப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம். அனைத்து ஆய்வுகளும் முடிந்தப்பின்னர் கடந்த நவம்பர் மாதம் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எவ்வித எதிர்ப்பும் இல்லாத நிலையில் இந்த 11 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இதன்மூலம் மொத்தம் 56 பொருட்களுக்கு புவிசார்குறியீடு பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.