தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்று; 'மாஸ்க்' அணிய அறிவுறுத்திய சுகாதாரத்துறை
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்றுகள் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், இப்போது, வைரஸ்கள் பரப்பும் இன்ஃபிளூயன்ஸா காய்ச்சல், டெங்கு மற்றும் நுரையீரல் தொற்றுகள் அதிகரித்துள்ளன எனத்தெரிவித்துள்ளது. அதோடு, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும், நோயின் தீவிரம் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயதுடிப்பு, சிறுநீரின் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.