
தமிழகத்தில் அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் விரைவில் 'இ-ஸ்டாம்ப்' சேவை
செய்தி முன்னோட்டம்
சொத்து விற்பனை பத்திரம் தொடர்பாக, குறிப்பிட்ட மதிப்புக்கு முத்திரை தீர்வு மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
பத்திரப்பதிவில் முத்திரை தாள்களைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக, 'இ-ஸ்டாம்ப்' என்ற புதிய வசதியை அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களில் விரைவில் அறிமுகப்படுத்த பரிசீலனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் இ-ஸ்டாம்ப் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதால், பொது மக்கள் வெளியாட்களிடம் கூடுதல் செலவுகளைத் தடுக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.
அதோடு போலி முகவர்களிடம் ஏமாறாமல் பொதுமக்களை காப்பாற்ற இந்த வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இ-ஸ்டாம்பிங்
ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்து சான்றிதழ் பெற்றால் போதும்
செயல்பாட்டில், முத்திரை தாள் வாங்கி, அதில் பத்திரங்களை எழுதுவது வழக்கம்.
இதற்கான உரிமை முத்திரை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 'டிஜிட்டல்' முறையில் இ-ஸ்டாம்ப் சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை முத்திரை தாளில் செலுத்தாமல், அத்தகைய தொகையை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தி, இ-ஸ்டாம்பிங் சான்றிதழை பெற முடியும்.
இந்த சான்றிதழை பத்திரத்துடன் இணைத்து பதிவுக்கு தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் முறையை ஏற்கனவே பதிவுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
முன்னர், ஒரு சில சார் - பதிவாளர் அலுவலகங்களில் இ-ஸ்டாம்ப் வசதி மற்றும் தனி பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால், காலப்போக்கில் அவை செயல்படவில்லை.
தற்போது அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இதை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.