அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனை தொடர்ந்து நேற்றே தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துவக்கபள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 ஆகும். அதில், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985 ஆகும். முதற்கட்டமாக இந்த மூத்த ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோல்டு திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இந்த திட்டம் எவ்வாறு செயல்படும்?
இந்த திட்டத்தின்படி, 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களையும், மூன்றாக பிரித்து, ஆண்டு ஒன்றிற்கு சுமார் 35600 ஆசிரியர்கள் வீதம், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். மேலே குறிப்பிட்ட 35,600 ஆசிரியர்களுக்கும், கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 என ரூ.3.56 கோடி தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு, இந்த உடல்பரிசோதனைக்கு ஆகும் செலவு அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்ட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தொகையை தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.