முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை
செய்தி முன்னோட்டம்
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் முறைகேடு நடந்திருப்பதை தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டுபிடித்தது.
இதேபோல், திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி மோசடி நடைபெற்றுள்ளது.
இந்த மோசடிகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிப் பொருட்களை கூடுதலாக பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோசடிகளை களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனை நடத்தியது.
அதிகாரிகள் குழு
ஐஏஎஸ் மட்டத்திலான அதிகாரிகள் தலைமையில் குழு
இதுபோன்ற முறைகேடுகளை களையவும், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, பள்ளிக் கல்வித்துறையில் ஐஏஎஸ் தரத்திலான அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த அதிகாரிகள் அனைவரும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா என்பதை கவனிப்பதோடு, பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்வர்.
மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், ஆய்வு செய்ததற்கான அறிக்கையை 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.