டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, "செங்கல்பட்டு வழியே செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் நவம்பர் 9, 10, 11 தேதிகளில் கோயம்பேடு பகுதியிலிருந்து புறப்பட்டு நசரத்பேட்டை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் காவல்துறை உத்தரவுப்படி, வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மட்டுமே ஆம்னி பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்லும்
இதன் காரணமாக பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று ஆம்னி பேருந்துகளில் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இயங்கும் ஆம்னி பேருந்துகள், காவல்துறை அனுமதி பெற்று வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்தினை மிகாமல் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்றும் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகள் குறித்த எந்தவொரு புகார்களையும் 9043379664 என்னும் தொலைபேசி எண்ணிற்கு பயணிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.