
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைமசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதுகுறித்து கடிதம் ஒன்றினையும் அவர் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதில், ஆன்லைன் சைபர் என்பது மத்தியஅரசின் வரம்புக்குள் அடங்கிய ஒன்று.
தேசியளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநிலஅரசு மட்டுமே ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடைசெய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, ஒரு தனிப்பட்ட நபர் தனது திறமையை கொண்டு சம்பாதிப்பது என்பது அரசியலமைப்பின் 19 (1) (g)பிரிவின்கீழ் அவரது அடிப்படை உரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக ஆளுநர் மசோதாவை திருப்பியனுப்பியுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
உரிமை உண்டு
திருப்பியனுப்பட்ட மசோதா குறித்து தமிழக சட்ட அமைச்சர்
அதற்கு அவர், இது குறித்த தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார்.
அவை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பொழுது நீதிமன்றம் சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், நீதிமன்றம் இதுகுறித்து முன்னதாக இயற்றிய சட்டத்தில் திருத்தங்களை தான் செய்ய சொல்லியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி தான் இந்த புதிய சட்டமசோதா இயற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் சட்டமன்றத்திற்கு சூதாட்டதடை சட்டத்தை கொண்டுவர உரிமை உண்டு.
ஆனால் சட்டம் இயற்ற உரிமையில்லை என்றுகூறி ஆளுநர் எவ்வாறு இந்த மசோதாவை கையெழுத்திடாமல் நீக்கினார் என்பது தங்களுக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மீண்டும் இதனை சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அவர் ஒப்புதல் அளித்துதான் ஆகவேண்டும், மறுக்க வாய்ப்பேயில்லை என்றும் கூறியுள்ளார்.