
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
செய்தி முன்னோட்டம்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்த மாதாந்திர தேர்வுகள் மாணவர்களின் மனப்பாட திறனுக்கு பதிலாக கருத்தியல் புரிதலை வளர்க்கும் நோக்கில் நடைபெறுகின்றன. மேலும், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், உயர்நிலை சிந்தனை (Higher Order Thinking - HOT) கேள்விகள் இதில் இடம்பெற உள்ளன.
வினாத்தாள்கள்
SCERT மூலம் வினாத்தாள்கள்
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) இந்த வினாத்தாள்களை தயார் செய்யும். பிறகு, அவை மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (DIET) மூலம் தலைமைக் கல்வி அதிகாரிகள் (CEO) வழியாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும். மதிப்பீடுகளில் இடம்பெறும் பாடங்கள்: இந்த மாதாந்திர மதிப்பீடுகள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவு உள்ளிட்ட முக்கிய பாடங்களை உள்ளடக்கும். தேர்வுகளை தொடர்ந்து, பாட ஆசிரியர்கள் மாணவர்களுடன் கேள்விகள் மற்றும் பதில்களைப் பகிர்ந்து, கருத்து புரிதலை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பீடு
முன்னைய நடைமுறை Vs புதிய திட்டம்:
இதற்கு முன், மாதாந்திர தேர்வுகள் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்பட்டன. தற்போதைய நடவடிக்கையின் மூலம், அந்த திட்டம் 1ஆம் வகுப்பிலிருந்தே நடைமுறைக்கு வருகிறது. இது கல்வியில் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்ற சோசலிசக் கொள்கைகளுக்கு ஒத்துச்செல்லும் ஒரு முயற்சி எனவும், மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.