நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம்
இந்தியா நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் (MIT) நடந்த பவள விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர், நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், "இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக தமிழகத்திலுள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனம் இடம்பிடித்துள்ளது. இளைஞர்களின் நம்பிக்கையின் மறு உருவமாக விளங்கும் ஏபிஜே அப்துல் கலாம் படித்த கல்லூரி என்னும் பெருமையினை விட வேறென்ன நமக்கு வேண்டும்?!" என்று பெருமிதமாக பேசியுள்ளார்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவதினை நோக்கமாக கொண்டுள்ள அரசு
அதனை தொடர்ந்து, எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே பன்முக ஆற்றல் கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தமிழக மாணவர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களாக உருவாக்க அமைக்கப்பட்டது தான் 'நான் முதல்வன்' திட்டம். திராவிட மாடல் ஆட்சியில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவதினையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் அறிவாற்றலிலும் சிறந்து விளங்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "அரசின் அனைத்து நலத்திட்டங்களின் பயன்பாட்டினையும், எம்.ஐ.டி. மாணவர்கள் பெற்று வரும் நிலையில், அந்த கல்லூரி வளாகத்தில், 1000 பேர் அமரும் வகையில் ஏ.சி.வசதியுடன் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடவேண்டியவை.