காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற்றது. இந்த காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டு, அதன் பின்னர் பள்ளியைத் திறக்க திட்டமிடப்பட்டது. எனினும், ஆசியர்களின் கோரிக்கையை அடுத்து விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்
பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்ட நிலையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சிறப்பு வகுப்புகளை வீட்டிலிருந்தே வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் சில பள்ளிகள் இதற்கான அட்டவணையையே வெளியிட்டதாகக் கூறப்படும் நிலையில், இது மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தியுள்ள பள்ளிக் கல்வித்துறை, உத்தரவை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு, காலாண்டு விடுமுறையை குதூகலமாக கொண்டாட திட்டமிட்ட மாணவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.