தமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
நடப்பு கல்வியாண்டில் 6-12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6-10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 11ம்.,தேதி தேர்வு துவங்கி டிசம்பர் 21ம்.,தேதி முடிவடைகிறது. 11-12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 7ம்.,தேதி துவங்கி 22ம்.,தேதி முடிவுறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இம்முறை சிறப்பு குழு அமைக்கப்பட்டு 2 விதமான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படவுள்ளன என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் காலை 10 மணிக்கு துவங்கி தங்கள் தேர்வினை 12.30 மணிக்கு நிறைவு செய்வார்கள்.
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள்களை படிக்க நேரம் ஒதுக்கீடு
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தங்கள் தேர்வினை எதிர்கொள்வார்கள் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணிக்கு தேர்வு துவங்கி மாலை 4.30 வரையும், 12ம்.,வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு தேர்வு துவங்கி மதியம் 12.45 மணிக்கு நிறைவுறும். இதனிடையே வழங்கப்படும் வினாத்தாள்களை படிக்க 12ம்.,வகுப்பு மாணவர்களுக்கு 9.30 முதல் 9.40 மணி வரையும், 9.40-9.45 வரை விடைத்தாளை பூர்த்தி செய்யவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் 1.15 முதல் 1.25 வரை வினாத்தாள்களை படிக்கவும் 1.25-1.30 வரை விடைத்தாள்களை பூர்த்தி செய்யவும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.