'கொல்லூர் மூகாம்பிகை' கோயிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்; அரசியல் தலைவர்கள் பலர் அங்கு செல்வதன் ரகசியம் என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது 3 நாள் டெல்லி பயணத்தை இன்று (ஜூன் 12) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் டெல்லியிலிருந்து நேரடியாகக் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு இன்று மதியம் 3 மணிக்குச் செல்லவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் மற்றும் திரைத்துறைப் பிரபலங்களின் வரலாற்றோடு நீண்ட காலத் தொடர்பு கொண்ட இக்கோயிலுக்கு முதல்வர் விஜய் செல்வது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
ஆன்மீக அதிசயம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆன்மீக அதிசயம்
பெங்களூருவிலிருந்து சுமார் 458 கிலோமீட்டர் தொலைவில், கொடசாத்ரி மலையடிவாரத்தில் சவுபர்னிகா ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசங்கரரால் பஞ்சலோகச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிவசக்தி சொரூபமாக மூகாம்பிகை அம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் கருவறையில் உள்ள சுயம்பு ஜோதிர்லிங்கத்தின் மையப்பகுதியில் ஒரு தங்கக் கோடு அமைந்துள்ளது. சூரிய ஒளி படும்போது மட்டும் ஒளிரும் இந்த அதிசயக் கோடு, லிங்கத்தின் வலது பாதியை மும்மூர்த்திகளாகவும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்), இடது பாதியை முப்பெரும் தேவியராகவும் (காளி, லட்சுமி, சரஸ்வதி) பிரிக்கிறது.
சண்டி ஹோமம்
அரசியல் தலைவர்களும் சண்டி ஹோமத்தின் ரகசியமும்
அரசியல் தலைவர்கள், குறிப்பாக தமிழக முதலமைச்சர்கள் இக்கோயிலுக்குப் படையெடுப்பதற்கு ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் வலுவான காரணங்கள் உள்ளன. இக்கோயிலில் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியர், அரசியல்வாதிகளுக்குத் தேவையான அதிகாரம், செல்வாக்கு மற்றும் சாணக்கியத் தனத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது. இங்கு நடத்தப்படும் 'சண்டி ஹோமம்', அரசியலில் ஏற்படும் மறைமுக எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் சதித் திட்டங்களை முறியடிக்கும் வல்லமை கொண்டது என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இக்கோயிலுக்கு தங்க வாள் காணிக்கை அளித்துள்ளார். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இங்கு நேரில் வந்து சண்டி ஹோமம் நடத்தி வழிப்பட்டார். இந்த வரிசையில் தற்போது முதலமைச்சர் விஜய்யும் இங்குச் செல்வதால், அவரும் சண்டி ஹோமம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.