தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு, பிரதமர் மோடி, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரியின் கவர்னர் தமிழிசை சௌந்தராஜன், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, தனது பிறந்தநாளை முன்னிட்டு, காலை 8 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதி, முன்னாள் முதல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் கருணாநிதியின் சமாதி உள்ளிட்டவைகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார், ஸ்டாலின். இதனை தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து விட்டு, திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்று கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.