கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
தமிழகத்தின் முதல்வராக 5 முறையும், திமுக கட்சித்தலைவராக 50 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். இந்நிலையில் வரும் 7ம்தேதி கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனையொட்டி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ம்தேதி அமைதி பேரணி நடத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, வசனகர்த்தாவாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, அண்ணாவோடு திமுக'வில் இணைந்து பணியாற்றியக்காலத்தில் இருந்து அகில-இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர் கருணாநிதி. இவரின் 5ம்ஆண்டு நினைவு தினத்தினையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் கலந்துகொள்ளும் பேரணி நடத்தப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்றாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்த அழைப்பு
மேலும் அந்த அறிக்கையில், அன்றைய தினம் காலை 8 மணிக்கு துவங்கவுள்ள இந்த பேரணி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார். அதன்படி, அன்று திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் என அனைத்து திமுக அணியினரும் ஒன்றாக திரண்டு வந்து கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.