பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை, வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், வருவாய்துறை அமைச்சர், டிஜிபி, தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
நான்காம் தேதி கரையை கடக்கும் புயல்
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில், நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் இது 3 ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில், 4 ஆம் தேதி மாலை சென்னை மற்றும் மசூலிபட்டணத்திற்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வரை காற்று வீசலாம் என, தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இயல்பை விட 6% குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழை
கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில், 34 சென்டிமீட்டர் மழை வடகிழக்கு பருவமழை பொழிந்துள்ளது. இந்த காலத்தில், இயல்பான மழை பொழிவான 36 சென்டிமீட்டரை விட, இது 6% குறைவு. மேலும் புயல் கரையை கடக்கும் போது திருவள்ளூர் மாவட்டத்தில், அதிக கன மழை இருக்கக் கூடும் எனவும், சென்னையில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.