காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பெருநகர திட்டமிடல் மற்றும் தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாடு குறித்த திட்டமிடல் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல்,
விரிவான வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்த குழுமம் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.97 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்,
13.85 கோடி செலவில் சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையத்தினை மேம்படுத்துதல்,
11.50 கோடி மதிப்பீட்டில் கொண்டித்தோப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
குழுமம்
மொத்தம் ரூ.150 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டு திட்ட பணிகள்
இதனைத்தொடர்ந்து, சென்னை கோயம்பேடு சந்திப்பில் ரூ.10.30 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படவுள்ளது.
மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் ரூ.8.75கோடி செலவில் புதிய விளையாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது.
சென்னை காசிமேடு கடற்கரை பகுதி ரூ.8.65கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறாக மொத்தம் ரூ.150 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,15)அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும தலைவரான அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சிறு-குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர்.,அன்சூல் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.