Loading...
தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை: ₹264 கோடி நிதியுடன் 65 படைகள் அமைப்பு
65 சிறப்பு அதிரடிப் படைகளை முதல்வர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை: ₹264 கோடி நிதியுடன் 65 படைகள் அமைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
09:51 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக வேரறுக்கும் நோக்கில், ₹264 கோடி நிதியியக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப் படைகளை அமைத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக மாவட்டம் தோறும் சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பதவியேற்றபோது உறுதியளித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 65 சிறப்பு அதிரடிப் படைகளை முதல்வர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்கான அரசாணையை மாநில உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கட்டமைப்பு

65 படைகளின் விரிவான கட்டமைப்பு

மாநில அளவில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையின் கீழ் இயங்கும் இந்தச் சிறப்பு படைக்கான தலைமையகம் சென்னையில் செயல்படும்.

தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்புப் படை மற்றும் சென்னையில் 12 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 நகரங்களில் தலா இரண்டு சிறப்புப் படைகள் என மொத்தம் 65 சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிறப்புப் படையிலும் ஒரு காவல் ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் இடம்பெறவுள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 65 ஆய்வாளர்கள், 260 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,300 காவலர்கள் என 1,625 புதிய காவல்துறைப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கண்கணிப்பு

முதல்வர் நேரடிக் கண்காணிப்பில் நடவடிக்கை

இந்த சிறப்பு அதிரடிப் படைகள் அனைத்தும் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ₹264 கோடி நிதியுதவி மூலம், நவீன உள்கட்டமைப்புகளுடன் இப்படை தீவிரக் கண்காணிப்புப் பணிகளை உடனடியாக மாநிலம் முழுவதும் மேற்கொள்ளவுள்ளது.

ADVERTISEMENT