
இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்துகொண்டிருந்த பொழுது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை எடப்பாடி கே பழனிசாமி தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கொடுத்ததில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறையிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்போது இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மீண்டும் இவ்வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் எனக்கூறி உத்தரவிட்டது.
வழக்கு
கடந்த ஜூலை 18ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
இதன் காரணமாக மீண்டும் இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை முடிவில், 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாக கொண்டே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க தேவையில்லை என்று கூறி வழக்கினை கடந்த ஜூலை 18ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கினை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணையினை தொடர அனுமதி வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.