LOADING...
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?
திருவண்ணாமலை மகாதீப திருவிழா 2025

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2025
10:16 am

செய்தி முன்னோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மைய நிகழ்ச்சியாக, வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. வழக்கமாக, மகா தீபத்தின் போது சுமார் 2,500 பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீப தரிசனம் காண அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண் சரிவில் ஒரே வீட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

தடை விதிப்பு

பக்தர்கள் மலையேற தடை விதிப்பு

இதையடுத்து, மலையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகப் புவியியல் துறை அறிக்கை அளித்ததால், கடந்த ஆண்டு மகா தீபம் காட்சி அளித்த 11 நாட்களும் மலை ஏற மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து மலை மற்றும் மண்ணின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும், நவம்பர் 30ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

எதிர்பார்ப்பு

பக்தர்கள் எதிர்பார்ப்பு

இருப்பினும், தற்போது வரை பெரிய அளவில் மழை பெய்யாததால், இந்த ஆண்டு மகா தீபத்திற்கு மலை ஏற அனுமதி கிடைக்குமா என்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அனுமதி குறித்து விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement