திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் திருக்கார்த்திகை! வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, மாக்கோலமிட்டு, கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும். அதே நேரத்தில், மகா தீபம் என்று திருவண்ணாமலையில் பத்து நாட்கள் உற்சவம் முடிந்து இன்று, டிசம்பர் 6 மாலை மலை மேல் ஏற்றப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு ஆலய தரிசனம், மலையேற்றம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கவில்லை. பக்தர்களின் பாதுகாப்புக்கு, நூற்றுகணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், முறையாக பதிவு செய்தவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
பரணி தீபமும் மகா தீபமும்
ஈசனே அக்னி அம்சமாக அமர்ந்து அருள்பாலிக்கும் திருவண்ணாமலையில், லட்சகணக்கான பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர். கார்த்திகை தீப கொண்டாட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகா தீபத்தை நேரில் தரிசிக்க, நேற்று முதலே பக்தர்கள் அணிவகுப்பு நடைபற்று வருகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி, திரு அண்ணாமலையார் திருக்கோவிலில், காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற, நேற்றே மகா தீபக் கொப்பரை மற்றும் 4500 லிட்டர் நெய் ஆகியவை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த நாளில் அகல் விளக்குகளில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி, வீடு முழுவதும் ஜகஜ்ஜோதியாக தெரியும் வகையில், காணும் இடமெல்லாம் ஜோதி சொரூபத்தில், நெகிழ்ச்சியாக இருக்கும்.