இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்
இந்தியாவில் உள்ள 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திருப்பூர் தற்போது மாறியுள்ளது. 'வந்தாரை வாழவைக்கும் திருப்பூர்' என சொல்லும் அளவுக்கு திருப்பூர் உள்நாடு-வெளிநாடு ஏற்றுமதி என ஆண்டுக்கு ரூ.60ஆயிரம் கோடி வர்த்தகம் செய்கிறது. திருப்பூரின் இந்த வளர்ச்சியினை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்று பல இடங்களில் மத்தியவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியாவில் 75 இடங்களில் திருப்பூரை உருவாக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த 'மெகா பார்க்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 இடங்களிலும் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலும் இந்த ஜவுளிப்பூங்கா அமையவுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உலகளவில் 34%ஆடைத்தேவையினை நிவர்த்தி செய்வது சீனா மட்டுமே.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் முன்னேற்றம் காணும்
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியா,கம்போடியா,பாகிஸ்தான்,வியட்நாம் போன்ற நாடுகள் நமக்கு போட்டியாகவுள்ளது. இதில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 4%என்பதும் குறிப்பிடவேண்டியவை. கொரோனா காலத்திற்கு பின்னர் சீனாவுடன் தொடர்பிலிருந்த வர்த்தக நாடுகள் தங்கள் உற்பத்தி கேந்திரங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான சாத்தியங்களையும், ஏற்கனவே நம்மோடு சிறிதளவில் வர்த்தகம் செய்வோர் தங்கள் வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடிவுசெய்துள்ளது முக்கிய அம்சமாக தற்போது பார்க்கப்படுகிறது. இதற்கு ஆயத்தமாக இந்த ஜவுளிப்பூங்கா அறிவிப்பு பேருதவியாக இருக்கும். இந்நிலையில் கடந்தவாரம் திருப்பூரில் நடந்த சர்வதேச பின்னலாடை வர்த்தகக்கண்காட்சியின் அடிப்படை காரணம் செயற்கைநூலிழை ஆடையினை உற்பத்தி செய்வதாகவே இருந்தது. இந்த மெகா பார்க் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் ஒட்டுமொத்த ஜவுளித்துறையும், சர்வதேச ஆயத்த ஆடை உற்பத்தி துறையும் அடுத்த 5ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.