Loading...
திருப்பரங்குன்றம் மலையில் இன்று முதல் டிசம்பர் 15 வரை பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி: நேரம் & விதிகள் என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 15 வரை பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி

திருப்பரங்குன்றம் மலையில் இன்று முதல் டிசம்பர் 15 வரை பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி: நேரம் & விதிகள் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2026
12:03 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று நவம்பர் 29 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி வழங்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நேற்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கான தீபமேற்றும் விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

உச்சிப்பிள்ளையார் கோயில்

உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுமதி

திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் மட்டுமே பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று நவம்பர் 29 முதல் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பக்தர்கள் அங்கு சென்று தீபமேற்றி வழிபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் வளாகத்தில் அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டுகோள்

மத்திய பாதுகாப்புப் படையினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டுகோள்

மலைப் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் அமைதியான முறையில் தீபமேற்றி வழிபட்டுப் பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அடுத்தகட்ட விசாரணை

உச்ச நீதிமன்றத்தின் ஒருமுறை அனுமதி உத்தரவும் ஜனவரி 2027 அடுத்தகட்ட விசாரணையும்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கில் நடப்பு ஆண்டிற்கான ஒருமுறை நடவடிக்கையாக 50 பேர் கொண்ட குழுவினர் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த ஏற்பாடு எந்தவொரு நிரந்தர உரிமையையும் வழங்காது என்றும் மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் மசூதி விவகாரங்களில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT