LOADING...
ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி! திருப்பதியில் இன்று முதல் டோக்கன் இன்றி சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதியில் இன்று முதல் டோக்கன் இன்றி சொர்க்கவாசல் தரிசனம்

ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி! திருப்பதியில் இன்று முதல் டோக்கன் இன்றி சொர்க்கவாசல் தரிசனம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
10:54 am

செய்தி முன்னோட்டம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய, இன்று (ஜனவரி 2) முதல் டோக்கன்கள் தேவையில்லை எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1) ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகள் வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மாற்றம்

புதிய நடைமுறை

இன்று முதல் வரும் ஜனவரி 8 ஆம் தேதி வரை, டோக்கன்கள் இல்லாத சாதாரணப் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசன வரிசையில் சென்று சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானைத் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், ஜனவரி 8 வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தரிசனங்கள் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயமாகத் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா மற்றும் மேல் சட்டையுடனும், பெண்கள் சேலை அல்லது சுடிதாருடனும் (துப்பட்டாவுடன்) வரலாம்.

சலுகை

உள்ளூர் பக்தர்களுக்கான சலுகை

பரிந்துரைக் கடிதங்கள் எதுவும் இந்த நாட்களில் ஏற்கப்பட மாட்டாது என்றும், கவுண்ட்டர்களில் நேரடி டிக்கெட் விநியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி, திருமலை, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் பக்தர்களுக்காக ஜனவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தினமும் 5,000 தரிசன டோக்கன்கள் 'இ-குலுக்கல்' முறையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதி என்பதால், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் திருமலையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement