இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி
ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது திருப்பதி நகராட்சி. இந்தியாவின் மிக முக்கியமான திருத்தலங்களுள் ஒன்றாக விளங்கும் திருப்பதிக்கு தினமும் 1 லட்சம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருப்பதிக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும், திருப்பதி நகரவாசிகளின் பயன்பாட்டிற்கும் இரண்டு அடுக்க எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது திருப்பதி நகராட்சி. முன்னதாக, திருப்பதியில் சுலபமான போக்குவரத்திற்கு வழி செய்யும் வகையில் 20 புதிய சாலைகள் கட்டமைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது அந்நகராட்சி. இந்த புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டால், ஆந்திராவிலேயே முதலில் இரண்டு அடுக்கு பேருந்துகளை அறிமுகப்படுத்திய முதல் நகராட்சி என்ற பெயரை திருப்பதி நகராட்சி பெறும்.
எப்போது அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது?
திருப்பதியை நோக்கி பல்வேறு நகரங்களிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் வரும் பக்தர்கள் எளிதாக திருமலா திருப்பதியை அடைவதற்கு வழி செய்யும் வகையில் சமீபத்தில் தான் ஸ்ரீனிவாச சேது விரைவுச் சாலையை திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த விரைவுச் சாலையையும் திருப்பதி நகரகராட்சியின் ஆதரவு பெற்ற திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷனே கட்டமைத்தது. மேற்கூறிய வகையில் திருப்பதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அடுக்கு எலெக்ட்ரிக் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் முதல் இரண்டு அடுக்கு எலெக்ட்ரிக் பேருந்தை திருப்பதி சாலைகளில் இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.