
திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் கொண்ட புது செயலி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தங்கள் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ள வசதியாக திருப்பதி தேவஸ்தானம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது சோதனை முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலிக்கு 'டிடி தேவஸ்தானம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயலியின் நிறை, குறைகள் குறித்து பக்தர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, மேலும் இந்த செயலியில் கூடுதல் வசதிகள் செய்துதர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த செயலியை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று(ஜன.,27) வெளியிட்டுள்ளார்.
சிறப்பான சேவைகள்
பக்தர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு மேலும் செயலி மெருகேற்றப்படும் - சுப்பா ரெட்டி
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப்பா ரெட்டி, இதுவரை இருந்த 'கோவிந்தா' என்னும் செயலி புதுமுறையில் நவீனப்படுத்தப்பட்டு தற்போது புது செயலியாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த செயலி மூலம் பக்தர்கள் சாமி தரிசனம், தங்குமிடத்திற்கு முன்பதிவு, ஆர்ஜித சேவைகள், அங்கபிரதக்க்ஷணம் போன்றவற்றிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த செயலி மூலம் நன்கொடையும் வழங்கமுடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதிலுள்ள தகவல் குறிப்புகள் மூலம் கோயிலில் நடைபெறும் உற்சவம் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
தேவஸ்தான டிவி ஒளிபரப்புகளையும் இதன் மூலம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இந்த செயலி சிறப்பான சேவைகளை வழங்கும் என்று கூறிய சுப்பா ரெட்டி, இந்த செயலி குறித்து பக்தர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு மேலும் மெருகேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.