திருப்பதியில் ஓராண்டிற்கு பிறகு ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு கடந்த ஒரு ஆண்டாக தான் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 60 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில், உண்டியல் வருவாயும் மாதத்திற்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட உண்டியல் வருவாய் ரூ.3 கோடிக்கு மேல் வந்த நிலையில், கடந்த 2ம் தேதி வைகுண்ட ஏகாதேசி விழா நடந்தது. இதனையொட்டி, 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
இதனை தொடர்ந்து தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ஆன்லைன் தரிசனத்தில் ரூ.300 செலுத்தி 20 ஆயிரம் பேரும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 50 ஆயிரம் பேர் என்பதன் அடிப்படையில் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. வைகுண்ட ஏகாதேசியை தொடர்ந்து, 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில், பக்தர்களின் வருகை பாதியாக குறைந்துள்ளதாம். நேற்று மட்டும் 47,781 பேர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர், அதில் 15,695 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம், ரூ.2.10கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. கடந்த ஒரு ஆண்டிற்கு பின்னர் திருப்பதி உண்டியல் வருவாய் ரூ.2கோடிக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.